உலக நல்வாழ்வு ஆசிரமம்
திருநெல்வேலி மாவட்டம் - ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. கடந்த ஆண்டு அய்யா. பழ.நெடுமாறன் அவர்கள் தனது துணைவியார் பார்வதி அம்மையாருடன் சென்று 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியதும் தனது அனுபவத்தை தென்செய்தி இதழில் கட்டுரையாகவும் எழுதினார். இதைப் படித்த எனக்குள் ஆர்வம் அதிகரிக்க மேலும் செய்திகளை அய்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மேலும் மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமனும் அவரது துணைவியார் சித்ரா அம்மையாருடன் சென்று சில நாட்கள் சிவசைலதில் தங்கி சிகிச்சை பெற்ற அனுபவத்தை எளிமையாக எனக்கு விளக்கினார். இதன் பிறகே கடந்த ஏப்ரல் 10 முதல் 19ம் தேதி வரை நானும், எனது மனைவி மங்கையர்க்கரசியும் சிவசைலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்பினோம். சிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி என கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இயற்கையான முறையிலேயே சிகிச்சை நடைபெறுகின்றன. இது குறித்து விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன். ஆசிரமத்தில் காலை 6-00 மணிக்கெல்லாம் சூடான பார்லி கஞ்சி, சுக்குமல்லி காப்பி, க...